Thursday 11 June, 2009

மனதின் வார்த்தைகள்...

"என்னடா சொல்ற..!? இல்லையே.. என்கிட்ட சிரிச்சுதானே பேசினா.. நான் கையெழுத்து போட்டதே அவள் மேசையில் வச்சுதானே.. என்னவோ அழகாய் விவரிச்சு சொல்லிட்டிருந்தா.., நான் தான் ஏதோ யோசனையாய் அதை கவனிக்கல.. நீ சொல்றதப் பார்த்தால்... ம்ஹூம்.. என்னால நம்ப முடியலையே..” குமார் கண்ணனிடம் தன் நம்ப இயலாமையை வெளிப்படுத்தினான்.

“ம்...அப்போ அவளுக்கு நிறமாய், அழகாய் இருக்கிற ஆட்கள்கிட்டேதான் பேசத் தோணும்போல.. நான் கறுப்பு என்பதுதான் பிரச்சனையாய் இருக்கும். என்னைக் கண்டாலே எரிஞ்சு விழறா..” என்றான் கண்ணன்.

கண்ணன், குமார் இருவரும் ஒரு கட்டிடக் கட்டுமான நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். அது அவர்கள் நண்பன் உதயனின் தந்தையின் நிறுவனம்தான். மூவருமே கட்டிடப் பொறியாளருக்குப் படித்தவர்கள்தான் என்றபோதும், கண்ணன் குடும்ப சூழ்நிலைகளினால் படிப்பை முடிக்க முடியாமல் போனது.

அதனால், உதயன் நிறுவனத்தை கவனிக்க, குமார் பொறியாளராக இருக்க, கண்ணன் தள மேற்பார்வையாளராக இருந்தான்.

கல்லூரிக் காலம் தொட்டு நண்பர்கள் மூவரும் தொடர்பிலேயே இருந்து வந்த போதும், கண்ணன், உதயன், குமாரை விட இரு வயது மூத்தவன் என்பதாலும், தந்தையின் உடல்நிலை மோசமான காரணமாய் வைத்தியத்திற்காய் அங்குமிங்கும் அழைத்துச் சென்றும், அவர் இறந்து சில மாதங்களே ஆகியிருந்ததாலும், உதயனின் நிறுவனத்தில் கண்ணன் வேலைக்கு சேர்ந்து வெகு சில மாதங்கள்தான் ஆகிறது.

வேலைக்கு வந்த இடத்தில், கண்ணனுக்குப் பிறகு உதயனின் செயலாளராய் வேலைக்கு சேர்ந்த கீதாதான் அவனைக் கண்டாலே எரிந்து விழுவதாய் இருந்தாள். கண்ணனுக்கு அவளைப் பார்க்கும் போதெல்லாம் அன்றைக்குதான் பூத்த புது மலராய் தெரிவாள். பார்த்தவுடன் அவன் உதடுகள், கண்களோடு இணைந்து மெல்லிய புன்னகை பூக்கும். ஆனால், அவளோ அவனில் குறை கண்டு சொல்லிக் கொண்டே இருப்பாள்.

இன்றைக்குக் காலையில் கூட அப்படித்தான் நிகழ்ந்தது. காலையில் தளத்திற்கு வரும் முன் அலுவலகம் சென்று கையொப்பம் இடுகையில் 15 நிமிடத் தாமதமாகி இருந்தது. உதயனிடம் அலைபேசியில் தான் வரத் தாமதம் ஆகும் விவரத்தினை அவன் தெரிவித்தும் இருந்தான் என்பதால், 15 நிமிடத் தாமதம் எனத் தெரியும்படியாகவே கையொப்பமிட்டிருந்தான்.

உதயன் வேறு தளமொன்றினைப் பார்வையிட சென்று விட்டதால், வருகைப் பதிவேடு கீதாவின் மேசைக்குப் போக, அவனின் தாமதம் அறிந்து, “ வேலைக்கு இப்படித் தாமதமாக வந்தால் எப்படி..!? ஒழுங்காய் வேலை செய்யும் எண்ணம் இல்லையோ..!? “ எனக் கேட்டாள்.

அவளுக்குப் பதில் சொல்லாமல், பதிவேட்டில் அவனுக்கு அடுத்துக் கையொப்பமிட்டிருந்த சிலரின் பெயர்களைப் பார்த்துவிட்டுக் கண்கள் விரிய அவளைப் பார்த்தான் அவன்.

“ என்ன பார்வை..!? பதில் சொல்லுங்கள்.. இப்படியே தாமதமாக வந்தால் வேலை எப்படி நடக்கும்..!? நான் பாஸிடம் புகார் செய்யப் போகிறேன் இதை“ என்று சற்று கோபத்தை அதிகப்படுத்திப் பேசினாள்.

அவளை சிறுபிள்ளை போல் நோக்கிய கண்ணன், தொண்டையை கணைத்துக் கொண்டு, குரலை சற்று மட்டுப்படுத்தி “ நான் உதயன் சாரிடம் அனுமதி பெற்றிருந்தேன் மேடம். ஆனால், நீங்கள் அவரிடம் இவ்விவரம் எடுத்துச் செல்ல வேண்டாம். ஏனென்றால், எனக்குப் பிறகு கையொப்பம் இட்டிருப்பவர்கள் செய்திருக்கும் காரியம் நீங்கள் கண்டுகொள்ளவில்லை என உங்களுக்குதான் திட்டு விழும் மேடம்.. சரிதானா மேடம்..!? நன்றாக பாருங்கள் மேடம்.. அது குறித்து ஏதேனும் செய்ய முடிந்தால் செய்யுங்கள் மேடம். நான் தளத்துக்குப் போக வேண்டும், வருகிறேன் மேடம்..” எனக் கண்களால் சிரித்து, உதட்டை ஒரு போல குவித்துக் காட்டிவிட்டுப் போனான்.

திமிர்.. திமிர்... பெரிய மன்மதன் என நினைப்பு.. அழகுக் காட்டுகிறானே.. மேடம், மேடம் என ஒவ்வொரு முறை அழைக்கும் போதும் முட்டாள் என சொல்வது போல, தன்னைப் பார்த்து அவன் நகைத்தது புரிந்து போக, பதிவேட்டினைப் பார்த்தாள் அவள். அப்போதுதான், கண்ணனுக்குப் பின் கையொப்பமிட்டிருந்த சிலர் செய்த காரியம் தெரிய வந்தது. அனுமதி பெற்று தாமதமாக வந்தவன், தான் வந்த நேரத்தை சரியாக இட்டிருக்க, அவனுக்குப் பிறகு வந்த் மற்றவர்களோ, மேலே கவனிக்காமல், தாங்கள் சரியான நேரத்துக்கு வந்ததாக எழுதிக் கையொப்பமிட்டிருந்தார்கள். அவளோ அதைக் கவனிக்காமல், இவனை அழைத்துக் கண்டித்திருக்கிறாள்.. பிறகு, அவன் சிரிக்க மாட்டானா..!?

இப்படியாக இவள் இங்கு சிந்தித்துக் கொண்டிருக்க, தளத்தில் குமார், கண்ணனைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தான்..” என்னடா மச்சி என்ன பிரச்சனை..!? எப்போதும் கருப்பு என உன்னைத் தாழ்த்தி நீ சொல்லிக் கொண்டதில்லையே.. இப்போது என்ன வந்ததாம்..!? நானும், உதயனும் கூட நல்ல நிறம் தான்.. அழகுதான்.. இல்லையென சொல்லவில்லை.. தற்பெருமை என நினைக்காதே.. நான் இதைச் சொல்வதே, நீ எங்கள் இருவரையும் விட கம்பீரமானவன், அழகானவன் என சொல்லதான்.. உன் கருப்புதாண்டா உனக்கு அழகு. நீ மட்டும் சிரித்தால் இந்த கீதா என்ன, நூறு பெண்கள் மயங்குவார்களே... நானே சமயத்தில் உன்னைப் பார்க்கையில் ஏன் பெண்ணாகப் பிறக்காது போனோம் என நினைத்திருக்கிறேன்... நீ இப்படி நிறப் பாகுபாடு பார்த்ததாக எனக்கு நினைவே இல்லையேடா மச்சி.. சொல்லு.. என்னதான் நடக்குது உள்ளுக்குள்ளே....” என கண்ணனின் நெஞ்சைத் தொட்டுக் காட்டிக் கேட்டான்.

அவன் குரலும், செய்கைகளும் கண்ணனுக்குக் குமார் கேட்பது என்ன எனப் புரியவைக்கத் தான் செய்தது.. “ ச்சு.. குமார்.. அப்படியேதும் இல்லப்பா.. ஆனால், அந்தப் பொண்ணு ஏன் என்கிட்டே இப்படி எரிஞ்சு விழறா எனப் புரிய மாட்டேங்குது.. என் சிரிப்புதானே.. அதைப் பார்த்தால்தான் இன்னும் கத்தறாளோ என இருக்கு.. என்னவோ போ..” என்று சலித்துக் கொண்டான்..

“ சரி.. சரி.. இதைப் பிறகு பார்ப்போம்.. இப்போ வேலையை பார்ப்போம்..” என்று பேச்சை முடித்தான் குமார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------


“ஓ.. அப்படியா.. இதோ வருகிறேன்.. தளத்திலிருந்து இருவரும் காரில் வந்து கொண்டிருக்கையில் விபத்தா..!? அடி பலமா..!? ஓ.. நீங்கள், அவர்கள் இருவருடன் மருத்துவமனையிலேயே இருங்கள் சார்.. இதோ, நான் கிளம்பி விட்டேன்...” உதயன் அலைபேசியை வைத்துவிட்டு, கீதாவை அழைத்து,

“கீதா.. நம்ம மேஸ்திரி தான் பேசினார். நம் குமாரும்.., கண்ணனும் தளத்திலிருந்து வருகையில்..” என சொல்லத் துவங்க, அவனின் அலைபேச்சை ஏற்கனவே கவனித்திருந்த கீதா.., “ அச்சோ.. என்ன சார்.. கண்ணனுக்கு விபத்தா.. அடி பலமா சார்.. மருத்துவமனையில் சேர்த்தாகி விட்டதா சார்..!? சார்.. என்ன சார்.. பதில் சொல்லுங்கள் சார்.. கண்ணனுக்கு அடி என்றுதானே போன்..!?” என்று பதட்டமாகக் கேட்டுக் கொண்டே போக, உதயன், சிறு முறுவலோடு அவளைக் கூர்ந்து நோக்கினான்.

“ஹூம்... இல்லை சிஸ்டர்.. கண்ணன் கொடுத்து வைத்தவன். குமாருக்கு அந்த பாக்கியம் இல்லை பாருங்கள்.. குமாருக்குதான் கையில் பலத்த அடியாம். கண்ணனுக்கு லேசாய் சிராய்ப்புகள்தானாம்.. இத்தனை அக்கறை கிடைக்குமானால் கை காலை உடைத்துக் கொண்டு படுத்துக் கொள்ளலாமே... சரிதான்.. நீங்கள் கண்ணனை நேரில் பார்க்கும் வரை திருப்தி அடைய மாட்டீர்கள். வாருங்கள். போய், குமார் அடிபட்டிருப்பதையும், கண்ணன் மாட்டிக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம்..”

“ கண்ணன் மாட்டிக் கொண்டாரா.. என்ன சார் சொல்றீங்க..!? “

“ம்.. ஆமாம் தங்கச்சிகிட்டே மாட்டிக்கிட்டானில்லே.. அதை அவனிடம் சொல்லி, அவன் என்ன நெளி நெளிகிறான் எனப் பார்க்க வேண்டாமா... வாங்க.. வாங்க.. சீக்கிரமாய் போவோம்..”

அப்போதுதான் மெல்லத் தன் உள்ளம் உணர்ந்து பூவாய் மலர்ந்தாள் கீதா.

கீதா, கண்ணன் பெயர் பொருத்தம் நன்றாகதான் இருக்கு.. இல்லையா..!?





2 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//மேலே கவனிக்காமல், தாங்கள் சரியான நேரத்துக்கு வந்ததாக எழுதிக் கையொப்பமிட்டிருந்தார்கள். அவளோ அதைக் கவனிக்காமல், இவனை அழைத்துக் கண்டித்திருக்கிறாள்.. பிறகு, அவன் சிரிக்க மாட்டானா..!?//

இப்படியெல்லாம் வம்பில் சிக்க வைத்தால் எப்படி தல..,

தீப விவேகன் said...

நன்றி திரு. சுரேஷ். :)